Wednesday, March 30, 2011

Time management 



நேரம் குறித்து எழுதுவது என்பது வாழ்க்கை குறித்து எழுதுவதாகும். ஆகவே இந்தத் தலைப்பு ஒரு பரந்து விரிந்த பொருள் கொண்டதாகும். இருப்பினும் இதன் சாராம்சத்தை முன்று உபதலைப்பின் கீழ் பிழிந்து விடலாம். அவை:
1) நேரத்தின் முக்கியத்துவம்,
2) நேரம் வீணாவதற்கான காரணங்கள்
3) நேரத்தை சிறப்பாக பயன்படுத்துவதற்கான வழிமுறைகள்
I. நேரத்தின் முக்கியத்துவம்:
நேரம் என்பது என்ன? மனிதன் வாழுகின்ற வாழ்க்கை. நேரம் கடந்து விடும்பொழுது வாழ்க்கையும் நம்மைவிட்டு கடந்து விடுகிறது. எனவே நேரம்தான் வாழ்க்கை, வாழ்க்கைதான் நேரம். சரி, வாழ்க்கை என்பது என்ன? இம்மை, மறுமை வெற்றி எனும் இயக்குகளை உள்ளடக்கியது. இம்மை, மறுமை வெற்றியின் அவசியம் வாழ்க்கையை முக்கியத்துவப்படுத்திவிடுகிறது. வெற்றிகரமான வாழ்க்கையின் அவசியம், நேரத்தை முக்கியத்துவப்படுத்திவிடுகிறது. இன்னும் நேரத்தின் தன்மைகளை விளங்கிக் கொண்டால்தான் அதன் உண்மையான மதிப்பை உணர்ந்து கொள்ள முடியும்.
நேரத்தின் தன்மைகள்:
1) தீதோ நன்றோ, நலனோ பலனோ, வீணோ விரயமோ நேரத்தை எதில் பயன்படுத்தினாலும் அல்லது பயன்படுத்தாமல் விட்டாலும் நேரமானது சங்கிலித் தொடர் போன்று சீராக நம்மை விட்டு ஒவ்வொரு கனமும் நிற்காமல் கடந்து சென்று கொண்டே இருக்கும்.
2) கடந்து சென்ற காலத்தை, இந்த உலகத்தையே விலையாக கொடுத்தாலும் மீளப்பெற முடியாது. மரித்துவிட்ட, கைசேதம் அடைந்த கெட்ட ஆத்மா கேட்கும் ''இறைவா! எனக்கு சிறிது காலம் அவகாசம் கொடு, நான் நல்லது செய்து திரும்புகிறேன்" என்று. ''அவ்வாறு அல்ல, நீ பொய்யுரைக்கின்றாய்" என்று இறைவன் சொல்வான். ஏனெனில் அவன் வாழும் போதே அவன் வாழ்க்கை குறித்து கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டும், மரணம் குறித்து உணர்த்தப்பட்டும் இன்னும் அவனுக்கு பல அவகாசங்கள் கொடுக்கப்பட்டும், உணராதவனாகவும், கெட்டவனாகவும் மரித்தவன் ஆவான். ஆகவே தங்குமிடம் நரகம்தான்.
3) பிற பொருட்களைப்போல சேமித்து வைக்கமுடியாது. எதிர்கால தேவைக்கென்றோ அல்லது இப்போது விரும்புவதையெல்லாம் மனம் போன போக்கில் அனுபவித்துவிட்டு அல்லது செய்துவிட்டு பிறகு சாதிக்கலாம், நல்லது செய்யலாம் என்று பயன் படுத்துவதற்கோ நேரத்தை சேமித்து வைக்க முடியாது.
4) பயன்படுத்தாமல் விட்டால், பனிக்கட்டியைப் போன்று கரைந்தே போய்விடும். இன்றை, இக்கணத்தை, இப்போதே பயன்படுத்தியாக வேண்டும். இல்லையெனில் நேரம் கரைந்து காணாமல் போய்விடும்.
5) இரு தருணங்களுக்கு இடையில் தடையை ஏற்படுத்தி தொலைவை ஏற்படுத்த முடியாது. நாம் சிந்தித்து, விழிப்போடு நேரத்தை செய்ய வேண்டிய பணியை செய்யாமல் நேரத்தை வீணடித்து விட்டோமே! சரி பரவாயில்லை அந்த நேரம் வராமல் ஒரு தடையை ஏற்படுத்தி பணியை முடித்து விட்டு பின்பு தடையை நீக்கி நேரத்தை வரச்செய்வோம் என்று கற்பனையும் செய்ய முடியாது. ''பருவத்தை விட்டால் பயிர்கள் பதராகிவிடும்'' - எச்சரிக்கை!
6) நேரத்தை விலைக்கு வாங்கவோ விற்கவோ, வாடகைக்கு எடுக்கவோ கொடுக்கவோ முடியாது. நமது தேவைக்குத் தக்கவாறு நேரத்தின் கன பரிமாணத்தை விரிக்கவோ, சுருக்கவோ, கூட்டவோ குறைக்கவோ முடியாது. அது அதற்குரிய அளவில்தான் இருக்கும்.
7) கடந்து சென்ற தருணங்களைபாய்ந்து சென்று பிடிக்க முடியாது. ச்சே! கொஞ்ச நேரம் முன்னால் வந்திருந்தால் காரியம் கச்சிதமாக முடிந்திருக்குமே, ஃபிளைட் கிடைத்திருக்குமே, பஸ் தவறி இருக்காதே ம்ஹீம்... தருணங்கள் கடந்தது கடந்ததுதான்.
இவை எல்லாவற்றையும் விட நமது ஆயுள் என்பது ஒரு வினாடிகூட அதிகம் எடுத்துக்கொள்ள முடியாத நிர்ணயிக்கப்பட்ட கால அளவைக்கொண்டது. அதனை விட மிக முக்கியமான விடயம் அந்தக் கால அளவு எவ்வளவு என்பதை எவருமே அறிய முடியாத வகையில் மரணம் எனும் சூட்சுமத்தை இறைவன் வைத்திருக்கிறான். ஆக, நேரம் என்பது முக்கியமானது அல்ல. அதிமுக்கியமானது என்பதை ஒவ்வொருவரும் மனதிலே இருத்தியாக வேண்டும்.
அல்லாஹ் தனது திருமறையிலே அல்அஸ்ர் எனும் 103 வது அத்தியாயத்தில், எந்தக் காலத்தை மனிதன் வீணடித்துவிடக்கூடாதோ அந்த காலத்தின்மீது சத்தியமிட்டு கூறுகின்றான்.
''காலத்தின் மீது சத்தியமாக, மனிதன் நட்டத்திலிருக்கிறான். எவர்கள் விசுவாசங்கொண்டு நற்கருமங்களைச் செய்தும், சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தும், பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அத்தகையோரைத் தவிர''. ஆக நேரத்தை வீணடித்தவன் நாளை மறுமையில் மிகப்பெரிய கைசேதத்துக்குரியவன்.
இன்னும் இரண்டு அருட்கொடைகளை மக்கள் முழுமையாக பயன்படுத்துவதில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். அவற்றில் ஒன்று ஓய்வு நேரம், மற்றது ஆரோக்கியம்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி), நூல்: புகாரி.

இறுதித்தீர்ப்பு நாளில் ஐந்து கேள்விகளுக்கு விடை தராதவரை மனிதன் இறைவனின் நீதிமன்றத்திலிருந்து அகன்று செல்லவே முடியாது. அதில் இரண்டு நேரத்தைப் பற்றியது அவை: 1) உன் ஆயுளை எவ்வாறு செலவிட்டாய், 2) உன் இளமையை எவ்வாறு கழித்தாய். என்பதாகும். ஆதாரம்: திர்மிதி

அபூபக்கர் சித்தீக்(ரலி) அவர்களின் பிரார்த்தனையில் இடம் பெறும் ஒரு வாசகம். ''இறைவா! எங்களை நேரம் குறித்து அலட்சியமாக இருக்க விட்டு விடாதே'' என்பதாகும்.

அடுத்து உமர்(ரலி) அவர்கள், ''இறைவா! எனது நேரத்தை அதிகப்படுத்துவாயாக. நேரத்தை சரியாக, சிறப்பாக பயன்படுத்தும் நற்பேற்றை அருள்வாயாக'' என்று பிரார்த்திப்பார்கள்.

இன்னும் ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸில் முதுமை வருமுன் இளமையை, மரணம் வருமுன் வாழ்க்கையைப் பயன்படுத்திக்கொள் என்ற நேரம் குறித்த பொன்மொழி பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் நமது இந்த உலக வாழ்க்கை மிகவும் குறுகியது. அல்லாஹ்விடத்தில் 2 மணிநேரத்திற்கு உட்பட்டதாகும். ஆம்! அல்லாஹ் மனிதர்களுக்கு வாழ்க்கை எனும் கேள்வித்தாளை வழங்கி உலகம் எனும் ஹாலில் பரீட்சை வைத்திருக்கின்றான். இன்னும் முஃமின்களுக்கு இது ஒரு சோதனைக் களமாகவே இருக்கிறது எனச் சொல்லிக்காட்டுகின்றான்.
I.A.S பரீட்சை எழுதுபவனின் துடிப்பையும், பரபரப்பையும், பதபதைப்பையும் எண்ணிப்பாருங்கள். அந்த தருணங்களை அவன் வீணாக்கமாட்டான் என்பது அல்ல, வீணானதை நினைத்துக்கூட பார்க்கமாட்டான் என்பதுதான் முக்கியம். அதனைவிட லட்சம் மடங்கு முக்கியமாண வாழ்க்கை எனும் பரீட்சையில் உட்கார்ந்து கொண்டு நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? சிந்திப்போம் வாருங்கள்!
II. நேரம் வீணாவதற்கான காரணங்கள்:
பொதுவாக நேரம் வீணாவதற்கான காரணங்களை நாம் அறிவோம். என்றாலும் அதனை பகுத்து ஆய்ந்தால்தான் வீணடிப்பதிலிருந்து விடுபட முடியும். ஆகவே நாம் இரண்டு கேள்விகளுக்கு விடை கண்டாக வேண்டும். 1) நேரமானது எப்படி வீணாகிறது? 2) ஏன் அவ்வாறு வீணாகிறது?
நேரம் வீணாவதற்கான காரியங்கள்:
இதில் முதல், முதலில்... இடம் வகிப்பது தொலைக்காட்சிப் பெட்டிதான். யதார்த்தமாக சொல்வதென்றால் இதன் மூலம் 5 % நன்மையைப் பெறுவதற்காக 95% கெட்டு நாசமாகிறோம். அதுவும் நல்ல விஷயத்தை இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பவர்களுக்கத்தான். எந்த நோக்கமும் இல்லாமல் ஷைத்தான் பெட்டியின் முன்பு அமர்ந்திருப்பவர்களுக்கு அதுவும் இல்லை. இன்னும் அந்த 5% நன்மையை, தீமையில் குறைவான பங்கு வகிக்கக்கூடிய பிற மீடியாக்களின் வாயிலாக நாளிதழ்கள் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம். T.V -யைப் பயன்படுத்தாமல் இருப்பதால் நட்டம் எதுவும் வந்து விடப்போவதில்லை. ஆனால் பயன்படுத்துவதால் நட்டம் உறுதி. அதுமட்டுமல்ல நாம் விரும்பாத நாசத்தையும் வா, வா என்று வலிய அழைத்து விருந்துவைக்கும். இதன்கூடவே இதன் அக்காவையும் சொல்லியாக வேண்டும். அதுதான் சினிமா.
சின்னத்திரையும் வெள்ளித்திரையும் சேர்ந்து தனி மனிதனை, குடும்பத்தை, சமூகத்தை, ஏன் நாட்டையே சீரழித்துக்கொண்டிருக்கிறது. இவற்றால் ஏற்படும் கேடுகளை, தீமைகளை சொல்லிமாளாது. குடும்ப கட்டமைப்பை, தனிமனித ஒழுக்கத்தை, சமூக கலாச்சாரத்தை சிதைத்து சின்னாபின்னமாக்குகிறது. பிஞ்சு உள்ளங்களில் காமம், கயமை, குரோதம், வக்கிரம், திகில் என எல்லாவிதமான நஞ்சையும் விதைக்கிறது. மனித இனத்தின் முன்னேற்றமான, பகுத்தறிவான சிந்தனை போக்கையே மழுங்கடித்து, மறக்கடித்து, சிதைத்து, திசைதிருப்பி, மனிதத்தின் புனிதத் தன்மைக்கு பெரும் தீங்கிழைக்கிறது.
கிரிக்கெட் - அறிவாளிகள் மத்தியில் இது ஒரு சிறந்த விளையாட்டா? என்ற சர்ச்சை ஒருபுறமிருக்கட்டும், இதற்கு இருக்கக்கூடிய மோகம், இல்லையில்லை வெறி.... சூதாட்டம் போல் ஆகிவிட்ட இதில் நமது நேரத்தை செலவிடுவது பெரிய அறிவீனம்.
அரட்டை - முக்கியமாக மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோருடைய பெருவரியான நேரங்களை சாகடிப்பது இந்த அரட்டைத்தான். மனம் சலிக்காது, கண்கள் துஞ்சாது, நடு நிசியிலும் பிரிய மனம் இல்லாது செய்த அரட்டையினால் சாதித்தது எனன்? என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம்.
அறிவுள்ள புத்தகங்களை விடுத்து அனாச்சாரமும், வீணும், விளையாட்டும் நிரம்பிய வார, மாத, வாரம் மிருமுறை இதழ்களுக்கென்றே வாழ்க்கையை அர்பணிப்பது. இவ்வாறு பரவலாக காணப்படுகிற சில முக்கியமான நேரத்தை வீணடிக்கும் காரியங்களை எடுத்துக்கூறியுள்ளேன். இவை போன்று ஊர் சுற்றுதல், தேவையற்ற மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், சந்திப்புகள் என்று எத்தனை எத்தனையோ உள்ளன. கட்டுரையின் பக்கங்களைக் கருதி, விரிவஞ்சி சுருக்கித்தருகின்றேன். இதுவரை காரியங்களைப் பார்த்தோம். இனி இவ்வாறு நாம் வீணர்களாக இருப்பதன் காரணங்களை ஆராய்வோம்.
நேரம் வீணாவதற்கான காரணங்கள்:
பயனுள்ள காரியத்தை விடுத்து பயனற்ற காரியத்தை நோக்கி நமது மனோ இச்சை செல்வதற்கும், அதிலேயே லயித்து நேரம் வீணாவதற்கும் பல உளவியல் காரணங்கள் இருக்கின்றன.
மனக்கட்டுப்பாடின்மை, சோம்பல், தோல்வி, பயம் பிறகு செய்யலாம் என்ற எண்ணம், பொறுப்புக்களை தட்டிக்கழிக்கும் மனப்பான்மை, அலட்சியப் போக்கு, தேவையற்ற மன உளச்சல்கள், துன்பங்கள், துயரங்கள், கவலைகள், திறமையின்மை, சீரான, உறுதியான முயற்ச்சியின்மை நிதானமின்மை... என்று பல வகையான உளவியல் பிரச்சினைகளே நேரம் வீணாவதற்கான அடிப்படை காரணங்களாக இருக்கின்றன. மேற்சொன்ன காரியங்கள் அனைத்துமே இதன் வெளிபாடுகள்தான். சரி இந்தப் பிரச்சினைகள் இல்லாதவர்களும் நேரத்தை வீணடிக்கிறார்களே என்றால் அவர்கள் வாழ்வில் இலட்சியமோ இலக்கோ அற்றவர்கள் ஆகவே அவர்களும் வீணர்களே. வாழ்கையில் சாதிக்க வேண்டிய இலக்குகள் எத்தனையோ இருக்க, யாரும் விரும்பி நேரத்தை வீணடிப்பதில்லை. இருப்பினும் தங்களது இயலாமை, தாழ்வு மனப்பான்மை, உறுதியின்மை போன்ற மேற்சொன்ன சில அல்லது பல காரணங்களால் காரியங்களை தள்ளிப்போடுகிறோம். பிறகு செய்யாமலேயே விட்டுவிடுகிறோம், தோல்வி பயத்தால் நடுநடுங்குகிறோம், இலக்கின்றி வாழுகின்றோம். இதனால் வாழ்வில் விரக்தி, நேரத்தில் வெற்றிடம் ஏற்படுகிறது. இதனை மறக்க, அல்லது நேரத்தை போக்க மனம் எண்ணுகிறது. ஷைத்தான் இந்த தருணத்தை கன கச்சிதமாக பயன்படுத்துகின்றான். எவையெல்லாம் தீமையாக இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் மனதுக்கு இதம் அளிப்பதாகவும், சந்தோஷம் அளிப்பதாகவும் காட்டுகின்றான் விளைவு அழிவுப்பாதை...
நாளை வரும், நமது கவலைகள் தீரும், இன்பக்கடலில் நீந்துவோம் என்று இன்றை மறந்து இக்கணத்தை துறந்து நாளை கனவில் மூழ்குபவர்களுக்கு அந்த நாளை என்பது வரவேயில்லை, வரவும் செய்யாது.
என்ன ஆகிவிட்டது நமக்கு! வாழ்வு குறித்த சரியான கண்ணோட்டம் இல்லை, லட்சியம் இல்லை, லட்சியத்தை அடைந்தே தீருவேன் என்று கொப்பளிக்கும் ஆர்வம் இல்லை, திட்டம் இல்லை, கொள்கை இல்லை, கடந்து விட்ட நாட்கள் குறித்து நமக்கு கவலையில்லை, இனிவரும் தினங்கள் குறித்தும் அக்கரையில்லை, ஏன் இன்றைய பொழுதை பயனுள்ள வகையில் கழிக்கவும் கூட நம்மிடம் ஒரு செயல் திட்டமில்லை. இதே நிலை நீடித்தால் சாதிக்க முடியாது என்பது இருக்கட்டும், தோல்வியை தவிர்க்க முடியாது என்பது நினைவில் நிற்கட்டும். சரி! வெற்றிபெற வேண்டும். அதற்கு என்ன செய்ய? வாருங்கள் வெற்றி பெறுவோம்.

III நேரத்தை சிறப்பாக பயன்படுத்துவதற்கான வழிமுறைகள்:
நேரம் வீணாவதைத் தடுத்து, நல்ல பயன்பாட்டில் அதனை வீரியப்படுத்தி வெற்றி பெற்றிட செய்ய வேண்டியது என்ன? முதலில் நேரம் குறித்த விழிப்புணர்வு நம்முள் ஆழமாக வேர் விடுவது மிக மிக அவசியம். நேரத்தை வீணாக்கிவிட்டோமே என்று விரக்தியுடன் அமர்ந்துவிட்டாலும் அது நேரத்தை வீணாக்கிவிடும். அதேபோல எதிர்காலத்துக்கு திட்டமிடலாம், ஆனால் எதிர்காலத்தை இப்போதே பயன்படுத்த முடியாது. ஆகவே இன்று, இக்கணம், இதைத்தான், இப்போதே பயன்படுத்த முடியும்.
ஒவ்வொரு நாளையும் தனது வாழ்வின் கடைசி நாளாக கருதி வந்தால், ஒவ்வொரு வினாடியையும் பதில் அளிக்கும் பொறுப்புணர்வுடன் கழித்தால் மனிதனுக்கு செயல்பட வேண்டும் என்ற ஊக்கமும், உற்சாகமும், உத்வேகமும் பிறக்கும். இன்னும் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள நேரம், அறிவு, செல்வம், திறமைகள், பதவி, குடும்பம் என்று எல்லாவற்றிற்கும் கணக்கு கேட்கப்படும், நாம் பதில் சொல்லியாக வேண்டும் என்பதை மனதில் பசுமையாக வைத்துக்கொள்ள வேண்டும். இது நமது வாழ்க்கையையே புரட்டிப் போடும், திருப்புமுனையை ஏற்படுத்தும்.
நாளை செய்யலாம். பிறகு செய்யலாம், என பணிகளை தள்ளிப்போடுவது ஒரு மோசமான நோய் ஆகும். செய்ய வேண்டிய பணிகளை முன்னுரிமையின் அடிப்படையில் வரிசைப்படுத்தி ஒன்றன்பின் ஒன்றாக காலம் நிர்ணயித்து செய்து முடிக்க வேண்டும். எல்லா வேலைகளையும் ஒரே சமயத்தில் மண்டையில் போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது. குறைந்த பணி நிறைந்த செயல்திறன் என்பதுதான் சிறப்பானது. வீண் வேலைகளை அறவே விட்டொதுக்க வேண்டும். தனது நேரம் முழுவதையும் அவசியப் பணிகளில் செலவிடுபவனே சிறந்த மனிதன்.
முதலில் சுயசீர்திருத்தம் அவசியம். நமது ஆளுமையை, நமது நடத்தையை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும். சீரான பழக்க வழக்கங்களுக்கான பயிற்ச்சியை மேற்கொள்ள வேண்டும். நமது அன்றாட அலுவல்களை ஒரு பெரிய அறுவை சிகிச்கை செய்து, தேவையற்றதை நீக்கி, அனைத்தையும் பயனுள்ளதாக மாற்றியமைக்க வேண்டும். நான், எனது விருப்பம், எனது திட்டம் என்று இல்லாமல் குழு உணர்வு, கூட்டுணர்வு வேண்டும். பல்வேறுபட்ட மக்களையும் அனுசரிக்க, அரவணைக்க, புரிதலுடன் செயல்பட கற்றுக்கொள்ள வேண்டும். இது குறுகிய காலத்தில் இலகுவான வெற்றியைப் பெற்றுத்தரும்.
நமது எண்ணங்கள், கொள்கைகள், லட்சியங்கள், உணர்வுகள், போன்றவற்றை அவ்வப்போது ஆய்வு செய்யவேண்டும். நமது விவகாரம், வியாபாரம், குடும்பம், சமூகம், நாடு என அனைத்திலும் மீதமான போக்கை (moderate) கையாள வேண்டும். ஒன்றிலேயே சாய்ந்து விடக்கூடாது. ஆலோசனை அவசியம் தேவை. ஆலோசனை செய்பவன் கைசேதம் அடையமாட்டான். எடுத்துக்கொண்ட எந்த வேலையையும் அரைகுறையாக இல்லாமல் கவனத்துடன் முழுஈடுபாட்டுடனும் முழுமைப்படுத்த வேண்டும். இன்றே செய்வோம் அதுவும் நன்றே செய்வோம் என்ற உத்வேகம் இருக்க வேண்டும்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக நமது வாழ்வின் லட்சியம் குறித்து நம்மிடம் தெளிவான, தீர்க்கமான முடிவு இருக்க வேண்டும். அப்போது தான் அதனடிப்படையில் திட்டமிடவும், காரியங்களை அமைத்துக்கொள்ளவும் தேவையான திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், சூழ்நிலைகளையும் நமக்கு கிடைத்துள்ள வாய்ப்புகளையும் அதற்கொப்ப பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். இவ்விதமாக தாஃவா சென்டர் மூலம் ஏன் அறிவை பெருக்கிக் கொள்ளக்கூடாது? என்கிற சிந்தனை புரட்சி வெடித்துக்கிளம்ப வேண்டும்.

நமது இலக்குகளை, பணிகளை நீண்டகால, இடைக்கால, குருகியகால திட்டங்களாக தீட்டி, ஒருங்கிணைத்து. ஒழுங்குபடுத்தி, எளிதாகச் செய்வதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். புதிது புதிதாக சோதித்துப் பார்ப்பதைவிட வெற்றிகரமான அனுபவங்களிலிருந்து பாடம் பெற வேண்டும். தேவைப்படும் இடங்களில் சிறந்த தொழில்நுட்பத்தையும் கருவிகளையும் பயன்படுத்த வேண்டும். விழிப்புணர்வும், தொலைநோக்கு பார்வையும் வேண்டும். அவ்வப்போது ஆய்வும், சுயமதிப்பீடும் அவசியம் செய்தாக வேண்டும். மறுமைச் சிந்தனை இம்மை குறித்த விழிப்புணர்வை ஊட்டவல்லது. ஒரே நாளில் நாம் நம்மை சீராக்கிவிடமுடியாது. தேவை சிறந்த பயிற்ச்சியும், தொடர்ந்த முயற்ச்சியும்தான். இன்ஷாஅல்லாஹ்!
இன்று நமதாகட்டும்!
நாளை நம்பிக்கையாகட்டும்...


Monday, March 28, 2011

இன்டர்நெட்: ஏமாறாமல் இருக்க பாதுகாப்பு வழிகள்





இன்டர்நெட் மற்றும் இமெயில் வழி பலர் ஏமாற்றப்படுவதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. சிறிது நாம் நிதானம் தவறினாலும் நம்மை ஏமாற்றத் திட்டமிடுபவர்களின் வலைகளில் விழுந்து நம் நிம்மதியை, நிதியை இழந்துவிடுகிறோம்.
இது போல பலியாகாமல் இருக்க, நாம் எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள்:

1. முன்பணம் கட்டாதீர்கள்:
ஏமாற்றப்படும் பல வேளைகளைப் பட்டியலிட்டால், முன் பணம் கட்டச் சொல்லி அழைக்கும் அழைப்புகளுக்குப் பலியாவோரே அதிகமாய் இருப்பதைப் பார்க்கலாம். பெரிய பரிசு உள்ளது. கடன் தீர்க்கப் பணம் தருகிறோம். பெரிய வேலை உங்களுக்கு மட்டுமே தருகிறோம். இலவசமாய் இயக்கிப் பார்க்கலாம் என செய்திகளைத் தந்து, அதன் பின்னர் முன் பணமாக ஒரு தொகையை செலுத்தச் சொல்லி அழைப்பு வரும்.
இதனை மிக அழகாக நியாயப்படுத்கும் வகையிலும் பல செய்திகள் தரப்படும். பெரிய அளவில் தான் பணம் அல்லது உதவி கிடைக்கப் போகிறதே, செலுத்தினால் என்ன என்று ஒரு கணம் எண்ணிவிட்டால், உங்கள் பணம் அவ்வளவு தான் அல்லது தொடர்ந்து மேலும் மேலும் பணம் செலுத்த கட்டாயப்படுத்தப்படுவீர்கள். இது போல செய்திகளை அது எந்த இடத்திலிருந்து வந்தாலும் உதாசீனப்படுத்திவிடுவதே நாம் பலியாகாமல் இருக்க ஒரே வழி.

2. அக்கவுண்ட் எண்:

மெயில்களை அனுப்பி உங்களை வீழ்த்தும் பெரும்பாலான ஸ்கேம் செய்திகளில், உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் எண், நெட்பேங்கிங் பாஸ்வேர்ட் கேட்டு வரும் மெயில்களே அதிகம். அக்கவுண்ட் எண் மற்றும் தகவல்களைக் கொடுத்துவிட்டீர்கள் என்றால் உங்கள் அக்கவுண்ட் அவ்வளவுதான். பைசா கூட அதில் இருக்காது. நீங்கள் சரியான இணைய தளத்தில் பொருள் வாங்குவதாக இருந்தாலும், உங்கள் கிரெடிட் கார்டை மட்டுமே பயன்படுத்தவும்.

3. தானாக தனி நபர் தகவல்:
ஒரு சிலர் மெயில் செய்தியில் வரும் ஏமாற்று வார்த்தைகளை நம்பி, தங்களைப் பற்றிய தனி நபர் தகவல்களைத் தந்துவிடுவார்கள். சிலர் தாங்கள் பணியாற்றும் நிறுவனம் குறித்த தகவல்களையும் தங்களை அறியாமல் தந்து மாட்டிக் கொள்வார்கள். இது போன்ற விஷயத்தில் அதிகக் கவனத்துடன் நடந்து கொண்டு, மாட்டிக் கொள்ளும் நிகழ்வினைத் தவிர்க்க வேண்டும்.

4.போலி பேஸ்புக் செய்திகள்:

பேஸ்புக்கில் அக்கவுண்ட் இல்லாமல் இருந்தால் கூட உங்கள் அக்கவுண்ட்டிற்குப் பலவாரியாக செய்திகள் வரும். புகழ்பெற்றவர்கள் மாட்டிக் கொண்டார்கள் - அது பற்றி அறிய வேண்டுமா என ஒரு செய்தி. உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டை ஒருவர் நீக்கிவிட்டார். நீக்கியவர் யாரெனத் தெரியும். மீண்டும் அக்கவுண்ட் தொடங்கலாமே என்று ஒரு செய்தி வரும். இது போன்ற செய்திகள் எல்லாம், உங்களைச் சிக்க வைக்கத்தான்.

5. வீடு தேடி வரும் பொருட்களை இணைய தளத்தில் வாங்க வேண்டாம்:

இணைய தள வர்த்தகம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. பலர் இதில் பொருட்களை வாங்கிப் பயன் பெற்று வருகின்றனர். ஆனால் நாம் நாள்தோறும் நம் வீட்டு வாசலில் விற்பனை செய்யப்படும், அடுத்த கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை, இணைய தளத்தில் வாங்க வேண்டுமா? விலை குறைவாகக் காட்டிப் பின்னர், அனுப்பும் செலவு, செயல்படும் செலவு, இணைய வரி எனப் பல தலைப்புகளில் காசைக் கறந்துவிடுவார்கள்.

6. பாதுகாப்பு வழிகளைக் கடைப்பிடியுங்கள்:
இந்த மலரில் பல முறை ஆன்லைன் வர்த்தகத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை எழுதி வந்திருக்கிறோம். அவற்றை அவசியம் கடைப்பிடிக்கவும். இணையத்தில் எப்போதும் நாம் ஏமாற்றப்பட்டு விடுவோம் என்ற எச்சரிக்கையுடனேயே அதனை அணுகினால், நிச்சயம் நீங்கள் பலியாக மாட்டீர்கள்.

Thursday, March 24, 2011

விக்கிலீக்ஸ் இரகசியம்






“”ஏகாதிபத்தியம் தன்னுடைய சதி திட்டங்கள் மூலமே வெற்றி பெறுகிறது. நாட்டை கொள்ளையிட போடும் கூட்டு மற்றும் ஒப்பந்தங்கள் போன்றவையே அதனுடைய இராஜ தந்திரங்கள். அந்த இராஜதந்திர இரகசியத்தை ஏகாதிபத்திய நாடு அதிகபட்ச முக்கியத்துவத்தை கொடுத்து பாதுகாக்கும்.”
- லியோன் டிராட்ஸ்கி, 1917 சோவியத் யூனியன்.

உலக போலீஸ்காரன் என்று அமெரிக்கா அழைக்கப்படுவது வழக்கம். காரணம், உலகளவில் பொருளாதார, யுத்த ஆதிக்கம் செலுத்துவதில் உச்சத்திலுள்ள நாடு. கடந்த ஆண்டுகளில் வியட் நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் என பல நாடுகளின் மீது போர் தொடுத்து ஏராளமான மக்களை கொன்றுள்ளது. அவைகளின் பொருளாதாரத்தையும் வாழ்வாதரங்களையும் இயற்கை வளங்களையும் கைப்பற்றியுள்ளது. இலத்தீன் அமெரிக்க நாடுகள் ( தென் அமெரிக்க நாடுகள்), மேற்காசிய நாடுகள், கிழக்காசிய நாடுகள், பொதுவுடமை நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் என எந்த நாடும் அதன் ஆதிக்க அரசியலிலிருந்து தப்பியதில்லை. எதிர்த்து கேட்பதற்கு எந்த நாடும் தயாராகவும் இல்லை. உலக அமைதி, மனித உரிமைகளை பேசும் நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்கா முன் னால் கைக்கட்டிக் கொண்டு நிற்கின்றன. இப்படியெல்லாம் இருந்த அமெரிக்கா இன்று “விக்கிலீக்ஸ் என்ற ஒரு இணையத்தளத்தினால் மூக்குடைக்கப்பட்டு, கையறுநிலையில் நிற்கிறது. அனைத்து நாடுகளையும் தொடர்புக் கொண்டு விக்கி லீக்ஸை நம்ப வேண்டாம். அதில் உள்ளது எல்லாம் பொய்’ என கதறி வருகிறது. அமெரிக்காவின் பொய் முகத்தை விக்கிலீக்ஸ் அகற்றிவிட்டதாகவே அனைத்துலக ஊடகங் களும் செய்திகளை வெளியிடுகின்றன. இச்சாதனை புரிந்த விக்கிலீக்ஸ் பக்கங்களை புரட்டுவோம்.
விக்கிலீக்ஸ் (Wikileaks) அல்லது விக்கி கசிவுகள் என்பது இன்று உலகமே பரபரப்பாக பேசப்படும் இணையத்தளம். ஒரு இலாப நோக்கற்ற இணைய ஊடகம். இதில் விக்கி என்பது யார் வேண்டுமானலும் பங்களிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் இணையத் தளங்களை குறிக்க பயன்படுத்தும் வார்த்தை. உதாரணத்திற்கு தகவல் களஞ்சியமான என்சைக்ளோபீடியாவின் விக்கி வடிவம்தான் விக்கிப்பிடியா (wikipedia.com). இதுபோல விக்கிலீக்ஸ் பெயர் அறிவிக்காதவர்களின் பங்களிப்புகளைக் கொண்டிருப்பதுடன், அரசு அல்லது சமய நிறுவனங்களின் பாதுகாக்கப் பட்ட இரகசிய ஆவணங்களை பொது மக்களின் பார்வைக்கு கொண்டு வருகின்றது. நிறுவிய ஓராண்டுகளுக் குள்ளேயே 1.2 மில்லியன் ஆவணங்கள் இந்த இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றில் மிக முக்கியமாக ஆப்கானிலும் ஈராக்கிலும் அமெரிக்கப் படை செய்த படுகொலைகளை பகிரங்கப்படுத்தியுள்ளது. இராணுவம் செய்த கொடூரங்களை ஒளிப்படங்களாக வெளியிட்டது. அமெரிக்க இராணுவ இரகசிய ஆவணங்களை வெளியிட்டு திகிலூட்டியது. இவ்வளவுக்கும் காரணமான விக்கிலீக்ஸ் இணையத்தை இயக்குபவர்கள் சில பேர் கொண்ட குழுதான். அதன் மூளை வர்ணிக்கப்படுபவர் விக்கி லீக்ஸின் ஆசிரியர் ஜூலியன் பவுல் அசாஞ்ச். இணையத்தளத்தை நிறுவியவர். அதன் முதன்மை ஆசிரியராகவும் பேச்சாளராகவும் உள்ளார். இவரின் தன்னலமற்ற மனித உரிமை ஆர்வம்தான் விக்கிலீக்ஸ் உருவாக காரணம்.

ஜூலியன் பவுல் அசாஞ்ச் (Julian Paul Assange) ஓர் ஆஸ்திரேலியர். இந்த துடிப்பான இளைஞருக்கு 41 வயது. திருமணமாகி விவாகரத்தானவர். தனது 16 வயதிலேயே கனடாவின் புகழ்பெற்ற நோர்டெல் தகவல் தொடர்பு நிறுவனத்தின் ஆஸ்திரேலிய வழங்கியினை தன் வசப்படுத்தி, அதனுள் புகுந்து அனைத்தையும் படித்த ஹேக்கிங் கில்லாடி.

ஹேக்கிங் என்பது ஒருவரின் வலைதளத்தின் உள்அமைப்புக்குள் திருட்டுத்தனமாக சென்று அவற்றில் வைக்கப்பட்டுள்ள தகவல்களை திருடுவது. மாட்டிக்கொண்டால் சிறைதண்டனை நிச்சயம். இதில் ஆதாரங்கள் இல்லாமல் ஹேக்கிங் செய்வதில் நிபுணத் துவம் பெற்றவர் ஜூலியன். வலையமைப்பின் பாதுகாப்பு வலையங்களை உடைத்து உட்புகுந்து கணினிகளுக் கோ, அதிலுள்ள கோப்புகளுக்கோ எந்த சேதத்தினையும் விளைவிக்காமல், தகவல்களை திருடுவதில் கரைக்கண்டவர். இது ஒரு பாதுகாப்பான திருட்டுத் தனம். இந்த வழியில் பல பொது நிறுவனங்கள், அரசுத் துறைகள் சார்ந்த வலையமைப்புக்குள் தகவல் களை எடுத்துவந்தார். அப்படி செய்துவந்த வேளையில் இந்த சமூகம் எப்படி ஒரு போலியான கட்டமைப்புக் குள் இருந்து கொண்டு அப்பாவி மக்களை அலைக் கழிக்கிறது என்பதனைக் புரிந்துக் கொண்டார். ஊடக போதையில் ஊறிக் கிடக்கும் இச்சமூகத்தினை ஒரு ஊடகப் புரட்சியின் மூலமே தெளிய வைக்க முடியும் என்று நம்பிய ஜூலியன் அதற்குக் கொடுத்த செயல் வடிவம்தான் “விக்கிலீக்ஸ்’.

அரசின் இரகசியங்களை பகிரங்கமாக மக்களிடம் எடுத்துவைப்பது என முடிவு செய்து விக்கிலீக்ஸ் தளத்தினை ஆரம்பித்தார் ஜூலியன். இதற்காக wikileaks.org எனற இணையத்தள முகவரி 2006-ஆம் ஆண்டு அக்டோபர் 4-ஆம் தேதி ஜூலியனின் பெயரில் பதிவு செய்யப்பட்டது. 20 கோப்பு நிரல்களை வழங்கும் வழங்கிகள் பல ஐரோப்பிய நாடுகளில் ஏற்படுத்தப்பட்டது.

ஏன் ஐரோப்பிய நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டது என்றால் இந்த நாடுகள் அனைத்தும் தகவல் பரவல் சட்டப்படி பாதுகாப்பு வழங்கும் நாடுகள். எந்த நாடா வது விக்கிலீக்ஸ் தளத்தை முடக்கினால், வேறொரு நாட்டில் இருந்து தளம் தடையின்றி செயல்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது. அதேபோல வெளி யிடப்படும் இரகசியத் தகவல்களை எந்த நேரத்திலும் எந்த நாட்டின் நிர்ப்பந்ததிற்காகவும் நீக்குவதில்லை என்பது விக்கிலீக்ஸ் கொள்கை. இப்படி சிறப்பாக திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டது விக்கிலீக்ஸ். இது இந்த நூற்றாண்டின் இணைய ஊடகத்தின் மாபெரும் புரட்சி என்றே சொல்லலாம்.
உலகமெங்கும் விக்கிலீக்ஸ் தளத்திற்கான பதிவு செய்யப் பட்ட தன்னார்வ தொண்டர்கள் மட்டும் 1200 பேர். இது 2009-ஆம் ஆண்டு விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல். இவர் களை வழிநடத்துவது விக்கிலீக்ஸ் ஆலோசனைக் குழு. அதில் ஜூலியன் அசாஞ்ச் (ஆலோசனைக் குழுவின் தலைவர்), பிலிப் ஆதம்ஸ், சி.ஜே.ஹின்க், பென் லூரி, டேசி நெம்கியால் கம்ஷிட்சாங், சூவா கியுவங், சிகோ விட்கேர், வாங் யுக்காய் ஆகியோர் உள்ளனர். மொத்தமே இவ்வளவு பேர்தான் விக்கிலீக்ஸின் பணியாளர்கள். இவர்களின் பணி கோப்புகளை சரிபார்ப்பது, மொழிபெயர்க்க வேண்டியிருந்ததால் மொழி பெயர்ப்பது, அதன் பின்னர் கோப்புகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து வெளியிடலாமா, வேண்டாமா என்று பரிந்துரைப்பது. அவ்வாறு பரிந்துரைக்கப்பட்டவைகளில் இருந்து சிறப்பானவையாக, முக்கியத் தகவல்களாக, தேர்ந்தெடுப்பது ஜூலியனின் வேலை. இவரே முதன்மை ஆசிரியர். இவர்களின் சீரிய பணியிலிருந்துதான் விக்கிலீக்ஸ் செயல்படுகிறது.
அடுத்ததாக, உங்களுக்கு இங்கு ஒரு சந்தேகம் வரலாம். சாதாரணமாக யாருக்கேனும் ஈமெயில் வழியே மிரட்டல் விடுத் தாலே அவர்கள் பயன்படுத்திய ஐ.பி (Internet Protocol address – IP address) முகவரியை கண்டுபித்து ஈமெயில் அனுப்பியவரை பிடித்துவிடுவார்கள். அப்படி இருக்க ஒரு நாட்டின் இரகசியத்தையே எப்படி விக்கிலீக்ஸிற்கு அனுப்பிவைக் கின்றனர். அவர்கள் மாட்டிகொள்ள மாட்டார்களா என கேள்வி எழுவது நியாயமானதே. இந்த மாபெரும் பிரச்சினையிலிருந்து தப்பிக்க விக்கிலீக்ஸ் தனது ஆர்வலர்களுக்கு பரிந்துரை செய் திருப்பது பர்ழ். இது ஒரு இணையத்தொடர்பு வழங்கி. www.torproject.orgஇல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது Tor anonymity network என குறிப்பிடப்படுகிறது. இதன் இலச்சினையே வெங்காயம் தான். வெங்காயம் உரிக்க, உரிக்க இதழ்கள்தான் கிடைக்குமே ஒழிய, ஒரு கட்டத்திற்கு மேல் ஒன்றுமே இருக்காது. கிட்டத்தட்ட அதே மாதிரி தான் இந்த டார். திருட்டுதனமாக இதன் மூலம் எதையும் அனுப்பலாம். இதனுள் போனால் நீங்கள் எங்கிருந்து என்ன தகவல்களை அனுப்புகிறீர்கள் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இப்படி எல்லா விதத்திலும் தயார்படுத்திக் கொண்டு ஊடக யுத்ததிற்கு தயாரானார்கள் விக்கிலீக்ஸ் குழுவினர்.

விக்கிலீக்ஸ் 2010 ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி சுமார் 30 நிமிடம் ஓடக் கூடிய ஒரு வீடியோவை Collateral Murder என்ற பெயரில் வெளியிட்டது. அவ்வளவுதான் ஒட்டு மொத்த அமெரிக்காவும் அவமானத்தால் முகத்தினை கவிழ்த்து கொண்டது. அப்படி என்ன இருந்தது அந்த வீடியோவில்?. எந்தவித விபரீத அறிகுறியும் இல்லாமல், வெறும் முன்னெச்ச ரிக்கைக்காக என்ற காரணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு சிட்டுக்குருவிகள் போல் சாதாரண மக்களை, குழந்தைகளை, பொதுமக்கள் குடியிருக்கும் கட்டிடத்தினை வேட்டையாடப் படுவது அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. அதில் இறந்தவர் களில் புகழ்பெற்ற “”வாஷிங்டன் போஸ்ட்” செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் இருவரும் அடங்குவர். அவர்களின் மரணம் குறித்து பலமுறை கேள்வியெழுப்பிய போதெல்லாம், தங்களுக்கு எதுவுமே தெரியாது என அதுவரை அமெரிக்கா மறுத்து வந்ததும், அந்த வீடியோ தாக்குதலில் ஈடுபட்ட அதே ராக்கெட்டிலிருந்தே எடுக்கப்பட்டிருந்ததும் ஆச்சர்யமான விஷயம்.
அமெரிக்காவின் மனித உரிமை, சர்வதேசப் போர் விதி முறை சாயங்கள் இணையத்தில் மொத்தமாகக் கரைந்து, இவ்வ ளவு நாள் மறைத்து வைக்கப்பட்ட விகாரமான இராணுவ முகம் உலகத்தின் கண்களுக்கு காட்சியளித்தது. உலக அளவில் மனித நேய ஆர்வலர் ஜூலியன் பவுல் அசாஞ்ச்-ஐ கொண்டாடியது. ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டன. நியூ மீடியா விருது, இங்கி லாந்து மீடியா விருது போன்றவை அவற்றில் முக்கியமானவை.
2010-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25-ஆம் தேதி விக்கி லீக்ஸ் 1.2 மில்லியன் அமெரிக்க இராணுவ கோப்புகளை கைப் பற்றியது. இவற்றை அலசிபார்த்து ஆயிரம் கோப்புகளை மட்டும் ஒழுங்குபடுத்தியது. அதனை ஆப்கானிஸ்தான் போர்க் குறிப்புகள் (Afghan War Diary) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. விக்கிலீக்ஸ் தளத்தில் மட்டுமே வெளியிடாமல் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ், ஜெர்மனியின் டெர் ஷெபிகல், பிரான்சின் லி மொன்ட், ஆஸ்திரேலியாவின் தி ஆஸ்திரேலியன், இங்கிலாந்தின் த கார்டியன் போன்ற முக்கியப் பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவ்வளவுதான் மறுநாள் உலகமே தடுமாறிப்போனது. விக்கிலீக்ஸ் தளத்தின் ஆரம்ப கால அதிரடி வெளியீடு திக்குமுக்காட வைத்து விட்டது. அமெரிக்க அரசாங்கத்தின் “”நேர்மையற்ற” போர் தந்திரங்கள், படுகொலைகள் அம்பலமானது. அதில் முக்கியமானது சக நேசநாட்டுப் (Nato) படையான கனடாவின் படையணியைச் சேர்ந்த நால்வரை அமெரிக்க ராணுவமே சுட்டுக்கொன்ற தும் இதில் அடக்கம். வட அமெரிக்காவில் அரசியல் உஷ்ணம் அதிகமானது. நீச்சல் தெரியாதவனைத் தண்ணீருக்குள் தள்ளிவிட்ட நிலைமை அமெரிக் காவிற்கு. இதற்கு முன் சரித்திரத்தில் இப்படி மொத்தமாக இவ்வளவு விஷயங்கள் ஒரே நேரத்தில் அரசாங்க ஆவணங்களாகவே வெளியிடும் அளவுக் கான ஊடகத் தாக்குதலை எந்த நாடும் எதிர் கொண்டதில்லை. “”இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை மீதான தாக்குதல், இல்லை இல்லை’ இவர்கள் யாரென்றே தெரியவில்லை, எப்படி நம்புவது’, இல்லை இல்லை அவர்கள் சொல்வதெல்லாம் ஆரம்பத்தில் நடந்தது, பின்னர் நாங்கள் திருந்திவிட்டோம், இல்லை இல்லை ‘அந்த கனடா வீரர்களை நாங்கள் கொல்லவில்லை,” என அமெரிக்கா உளறிக்கொட்டியது. அப்படி உளறினாலும், விக்கிலீக்ஸ் தளத்தின் ஆணிவேரை நோக்கியத் தாக்குதலிற்கான தனது சகல முயற்சிகளையும் அன்றே ஆரம்பித்தது அமெரிக்கா. அமெரிக்காவிற்கு இது மானப் பிரச்சினை என்பதால் முழுவேகத்துடன் விக்கிலீக்ஸ் நோக்கிப் பாய்ந்தது.

2010 நவம்பர் மாதம் 28- ஆம் தேதி அமெரிக்காவின் முகமூடி கழற்றப்பட்ட நாள். அமெரிக்க தூதரக இரகசியம் (Cablegate) பெயரில் 2,50,000 கோப்புகளை வெளியிட்டது விக்கிலீக்ஸ். அமெரிக்க தூதரகங்களின் ஆவணங்கள் இணைய வரலாற்றில் முதல் முறையாக அம்பலப்படுத்தப்பட்டது. இதனால் அமெரிக்க வெள்ளைமாளிகையின் அடித்தளமே ஆட்டம் கண்டது. “அமெரிக்காவின் பாதுகாப்புக் கெதிரான அச்சுறுத்தல், உலக நாடுகளில் ஒற்றுமையின் மீதானத் தாக்குதல்’’ என்றார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன். ஒவ்வொரு நாட்டுத் தலைவர்களையும் தொலைபேசியில் அமெரிக்கா அழைத்து “அதெல்லாம் பொய்.. ஏமாத்துறான்..நம்பாதீங்க’ என்றெல்லாம் கெஞ்சியது. வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்கா சகநாடுகளிடம் சிரம் தாழ்ந்து, பணிந்து பேச வைத்தார். ஜூலியன். விக்கிலீக்ஸ் வெளியிட்ட இரகசிய ஆவணங்களைப் படித்த பிறகு, இப்போது, ஒவ்வொரு நாட்டுக்கும் தனது தூதர்களை அனுப்பி, விக்கிலீக்ஸ்’ சொல்வதை தயவு செய்து நம்பிவிடாதீர்கள்’ என்று கோரிக்கை விடுத்துவருகிறது அமெரிக்கா. அப்படி என்ன இருக்கிறது அமெரிக்க தூதரக இரகசியத்தில். முதலில் நமது நாட்டை மட்டும் பார்ப்போம்.

இந்தியாவை இன்றுவரை சந்தேகத்துக்குரிய நாடாகவே அமெரிக்கா பார்ப்பதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. இதுவரை டெல்லியில் உள்ள தூதரகம் மூலம் 3,038 ரகசிய ஆவணங்கள் அமெரிக்காவுடன் பரிமாறப்பட்டுள்ளது. ராகுல் காந்தி, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் திமோதி ரோமரிடம் பேசும்போது, வளர்ந்து வரும் தீவிரவாதப் போக்குக் கொண்ட இந்துக் குழுக்களால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அதிக அச்சுறுத்தல்கள் உள்ளதென, தெரிவித்ததாக விக்கி லீக்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது. சிவசேனைக்கு எதிரான ராகுல் காந்தியின் கடுமையான அணுகுமுறை குறித்தும் இன்னொரு கசிவில் அமெரிக்கத் தூதர் குறிப்பிட்டிருக்கிறார். அதனால், ராகுல் காந்தியின் கருத்துக்கு ஆர்எஸ்எஸ், விசுவஹிந்து பரிஷத் மற்றும் பிரதான எதிர்க்கட்சியான பாஜக ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இருந்தபோதும் ராகுல் காந்தியின் கருத்துகள் சரியானதே என மதசார்பற்றவர்கள் கூறுகின்றனர்.

அதேபோல ஐ.நா. நிரந்தர உறுப்பினர் பதவியைப் பெற இந்தியா தீவிரமாக இருப்பதால், அது தொடர்பாக ஐ.நா.வில் என்னவிதமான முயற்சிகளை இந்தியா மேற்கொள்கிறது என்பது குறித்து உளவு பார்க்குமாறு தனது தூதர்களை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கேட்டுக் கொண்டதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. .
இந்திய அணு ஆயுத ஒப்பந்தம், ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக எடுத்து வரும் முயற்சிகள் உள்ளிட்டவை குறித்து உளவு பார்க்குமாறு அதில் ஹிலாரி அறிவுறுத்தியுள்ளார். இந்த பணியை தனது உளவு அமைப்புகளுக்கும் அவர் ஒதுக்கியுள்ளார். இந்தியா தவிர பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளும் ஐ.நா. பாது காப்பு சபை நிரந்தர உறுப்பினர் பதவிக்காக மோதி வருவதால் அவர்களையும் உளவு பார்க்க உத்தரவிட்டுள்ளார் ஹிலாரி.

இதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபை விரிவாக்கத்தை எதிர்த்து வரும் மெக்சிகோ, இத்தாலி, பாகிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகள், ஐரோப்பிய யூனியன், ஐ.நா. பொதுச் செயலகத்தில் உள்ள சிலரையும் தனக்கு கூட்டு சேர்த்து செயல்பட்டுள்ளது அமெரிக்கா. மேலும் அணி சேரா நாடுகள் கூட்டமைப்பு, ஜி-77 கூட்டமைப்பு, இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு குறித்தும் அது உளவு பார்த்துள்ளது. .

விக்கிலீக்ஸின் இந்த ஆவணங்கள் உலகை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. தவிர மத்திய கிழக்கிலும் பதற்றமான நிலைமைக்கு வழி வகுத்திருக்கிறது.
இந்த பின்விளைவுகளை எதிர்ப்பார்த்துதான் “விக்கிலீக்ஸை நம்பாதீர்கள்’ என்று அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு குடியரசுகள், ஆப்கானிஸ்தான், சீனா மற்றும் இந்தியாவுக்கு தொடர்ந்து செய்தி அனுப்பி வந்தார். அமெரிக்காவின் இந்த இராஜத்தந்திரம் இனி எடுபடுமா? என்பது சந்தேகம்தான்.

ஒவ்வொரு வெளியீட்டிற்குப் பிறகும் “”இதெல்லாம் எப்படி உங்களுக்கு மட்டும் கிடைக்கிறது” என ஜூலியனிடம் கேட்கும் போதெல்லாம், “”அது ராமசாமி கொடுத்தது…. இது கந்தசாமி கொடுத்தது…” என்பது வழக்கம். ஜூலியனை நன்கு அறிந்தவர்கள் யாரும் அதனை நம்புவதற்குத் தயாரில்லை. ஜூலியன் தனது ஹேக்கிங் நடவடிக்கைகள் மூலமே இதையெல்லாம் வெளியில் கொண்டுவருகின்றார். அதனிலிருந்து சட்ட ரீதியாகத் தன்னைப் பாதுகாக்க “விக்கி’ எனும் இணைய நெட்ஒர்க் அமைப்பினைக் கேடயமாக்குகிறார். அதே நேரத்தில் ஜூலியன் இரு பெண்கள் விஷயத்தில் மாட்டிக் கொண்டது என்பது என்னவோ உண்மைதான். இதற்காக இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டு, தற்சமயம் ஜாமீனில் வெளிவந்துள்ளார். தமது பக்கம் நியாயம் இருப்பதால்தான் பிணையில் வெளிவந்துள்ளதாக தெரிவித்துள்ள ஜூலியன், நீதிக்காக தொடர்ந்து போராடப் போவதாக தெரிவித்தார். “

“அமெரிக்க என்னை இன்னும் பின் தொடர்ந்தால் அமெரிக்காவில் திவாலாகும் நிலையில் உள்ள வங்கிகளின் ரகசியங்களை வெளியிடுவேன். அதேபோல அந்த வங்கிகளின் கணக்கு விவரங்கள் பகிரங்கப்படுத்தப் படும்” என மிரட்டல் விடுத்தார். எது எப்படியோ இன்று உலகளவில் பிடல் காஸ்ட்ரோ, குகே சாவேஸ், நோம் சோம்சுக்கி ரஷ்ய-சீன பொதுவுடமை தலைவர்கள் விக்கிலீக்ஸை ஆதரிக்கிறார்கள். சமூக ஆர்வலர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் விக்கிலீக்ஸுக்கு பெரும் ஆதரவை தந்துவருகின்றனர். இந்த பரபரப்பில் ரஷ்யா ஜூலியனுக்கு நோபல் பரிசு தர வேண்டும் என கூறியுள்ளது.
அவரது தாய்நாடான ஆஸ்திரேலியாவே ஜூலியன் எங்கள் மண்ணின் மைந்தன் அவரை நாங்கள் பாதுகாப்போம் என அறிவித்துள்ளது. அதே நேரத்தில் விக்கிலீக்ஸ் சீனாவுக்கு ஆதரவானது எனவும் கருதப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் எவ்வித சமரசமுமின்றி பணம் பதவிக்கு ஆசைப்படாமல் நேர்மையான துணிவான ஜூலியன் பவுல் அசாஞ்ச்-ன் சாதனை ஈடு இணையில்லாத ஒரு மாபெரும் ஊடக சாதனை இந்த நேர்மையான பத்திரிகையாளரின் வெற்றிப் பயணம் தொடரட்டும். மக்கள் விரோத அரசுகளின் இரகசியம் அம்பலமாகட்டும்.

Wednesday, March 23, 2011

ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன்




உலக புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ரெயிலில் பயணம் செய்தார். அவர் மனதிற்குள் ஒரு கஷ்டமான கணக்கிற்கு விடை தேடிக் கொண்டு இருந்தார். அப்போது டிக்கெட் பரிசோதகர் வந்தார்.

அவர் ஒவ்வொருவரிடமும் டிக்கெட் வாங்கி சோதித்து கையெழுத்து போட்டார். ஐன்ஸ்டீனிடம் டிக்கெட் கேட்டார். அவர் தான் அணிந்திருந்த கோட்டு பைக்குள் கையை விட்டார். டிக்கெட்டைத் தேடினார். அது எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. டிக்கெட் பரிசோதகர் அவரை உற்று பார்த்தார். அவர் அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் என்பதை அறிந்து கொண்டார். “பரவாயில்லை…ஐயா, டிக்கெட்டைத் தேட வேண்டாம்”என்று சொல்லிக் கொண்டே அடுத்த நபரிடம் டிக்கெட்டை வாங்கி பரிசோதித்தார்.
அபொழுதும் தனது சூட்கேசைத் திறந்து ஐன்ஸ்டீன் கவனமாக டிக்கெட்டைத் தேடிக் கொண்டு இருந்தார். அதன் உள்ளே இருந்த புத்தகங்களை எல்லாம் எடுத்து வெளியே போட்டுத் தேடினார். துணிகளிலும் டிக்கெட் இருக்கிறதா என்று ஒவ்வொன்றாக உதறி பார்த்தார்.

அப்போது மீண்டும் டிக்கெட் பரிசோதகர் அந்த வழியாக வந்தார். “ஐயா, தாங்களோ உலக புகழ் பெற்ற பெரும் விஞ்ஞானி. தங்களிடம் டிக்கெட் இல்லாவிட்டால் தான் என்ன? ஏன் வீணாக தேடிக் கொண்டு கஷ்டபடுகிறீர்கள்? உங்களால் இந்த நாட்டிற்கே பெருமை. டிக்கெட் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.” என்று மீண்டும் சமாதானபடுத்தினார்.
ஐன்ஸ்டீன் மீண்டும் தேடிக்கொண்டே, “உங்களுக்கு பரவாயில்லை. நான் எந்த ஊருக்கு போக வேண்டும் என்ற விவரம் டிக்கெட்டில் அல்லவா இருக்கிறது? நான் என்ன செய்வது? எனக்கு இப்போது டிக்கெட் வேண்டுமே..!” என்றார். உடன் இருந்த அனைவரும் இந்த பதிலைக் கேட்டு அதிர்ந்தனர்.

அப்புறமென்ன…டிக்கெட் கிடைக்கவே இல்லை. ரெயில் அடுத்த ஸ்டேஷனுக்கு வந்ததும், பரிசோதகர் ஐன்ஸ்டீனை உடன் அழைத்துச் சென்று தொலைபேசியின் முலம் அவர் மனைவியிடம் தொடர்பு கொள்ளச் செய்தார். ஐன்ஸ்டீன் தன் மனைவியிடம், “டியர் நான் வீட்டை விட்டு போகும் போது எந்த ஊருக்கு போவதாக உன்னிடம் சொல்லி விட்டு வந்தேன்?” என்று விசாரித்தார். மனைவி ஊரின் பெயரைச் சொன்னவுடன் அதை டைரியில் குறித்துக்கொண்டு அந்த ஊர் வந்ததும் இறங்கினார்.

கம்ப்யூட்டரில் தவிர்க்க வேண்டிய தவறுகள்






வாரம் இரு நாட்களில் நல்ல உடற்பயிற்சி, தினந்தோறும் இறைவணக்கம், அலுவலகத்தில் சீரான பணி, சட்டம் மதித்து நடத்தல் என நாம் நம் அன்றாட வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் பலவற்றை மேற்கொள்கிறோம். ஆனால் தொழில் நுட்பம் என்று வருகையில் நாம் பல தவறுகளை ஏற்படுத்துகிறோம்.
கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நாம் ஏற்படுத்தும், சில சாதாரண தவறுகளை இங்கு காணலாம்.

1. டெஸ்க்டாப்பில் அதிக ஐகான்கள்:

பலரின் டெஸ்க்டாப், எதனையும் ஏற்றுக் கொள்ளும் நம் மேஜை டிராயர் மாதிரி, குப்பையாய் காட்சி அளிக்கிறது. நாம் அதில் வைத்த பைலையே தேடி உடனே எடுக்க முடிவதில்லை. இதனாலேயே விண்டோஸ் இயக்கம், “பல ஐகான்கள் வெகுநாட்களாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. அவற்றைச் சரி செய்திடலாமா?" என்று பிழைச் செய்தி காட்டுகிறது.
இதனை எப்படி சரி செய்திடலாம்? அவ்வப்போது பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஐகான்களுக்குரிய பைல்களை, சார்ந்த ட்ரைவ்களுக்குக் கொண்டு சென்று வைக்க வேண்டும். பைல்களை இணையத்தில் இருந்து டவுண்லோட் செய்கையில், பெரும்பாலும் டெஸ்க் டாப்பிலேயே டவுண்லோட் செய்து வைக்கிறோம். அவசர வழிக்கு இது சரிதான். ஆனால் அடுத்து, அந்த பைலின் தன்மை, பொருள் சார்ந்து அதனை, அதற்கான ட்ரைவிற்குக் கொண்டு செல்ல வேண்டும்.

2. ஷட் டவுண் செய்திட பவர் பட்டன்:
இது லேப்டாப் கம்ப்யூட்டர் சார்ந்த செய்தி. பலர் லேப்டாப் கம்ப்யூட்டரின் பணி முடிந்தவுடன், அதனை முறையாக ஷட் டவுண் செய்திடுவதில்லை. பவர் பட்டனை அழுத்தி, கம்ப்யூட்டர் இயக்கத்தினை முடிவிற்குக் கொண்டு வருகிறோம் அல்லது கொண்டு வருவதாக நினைக்கிறோம். பல லேப்டாப்களில் இந்த பவர் பட்டன், லேப்டாப் கம்ப்யூட்டரை ஸ்லீப் மோட் என்னும் செயலற்ற நிலைக்குத்தான் கொண்டு செல்லும்.
இது ஒன்றும் மோசமான தவறு அல்ல. இது போலத் தூங்கும் லேப்டாப், சில நொடிகளில் இயக்கத்திற்கு வந்துவிடும். ஆனாலும் இவ்வாறு செய்வது தவறு. இதற்கான காரணங்கள் இரண்டு. முதலாவதாக, ஸ்லீப் மோட் என்பது முற்றிலும் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலை அல்ல. பேட்டரியின் பவர் அப்போதும் செலவழிந்து கொண்டு தான் இருக்கும். எனவே, தொடர்ந்து அது மின்சார சாக்கெட் ஒன்றில் இணைக்கப்பட்டிருந்தாலே, பாதுகாப்பாக இருக்கும். இல்லையேல், அதன் பேட்டரி பவர் தீர்ந்து போய்,மொத்தமும் சக்தி அற்ற பேட்டரி கொண்ட லேப்டாப் தான் உங்களுக்குக் கிடைக்கும்.
இரண்டாவதாக, நீங்கள் எப்போதும் கம்ப்யூட்டரை நிறுத்தி வைக்க, ஸ்லீப் மோடினை விரும்புவதாக இருந்தால், அது கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடும் வாய்ப்பினையே இழக்கிறது. விண்டோஸ் சுமுகமாக இயங்க வேண்டும் என்றால், அது முற்றிலும் நிறுத்தப்பட்டு, பின்னர் ரீ பூட் செய்யப்பட வேண்டும்.

3.மவுஸ் பயன்படுத்தி புரோகிராம் இயக்கம்:
ஒரு புரோகிராமினை இயக்க ஒவ்வொரு முறையும், ஸ்டார்ட், ஆல் புரோகிராம்ஸ் சென்று, புரோகிராமின் இயக்க பைல் பார்த்து கிளிக் செய்வது. அல்லது அதன் ஐகான் மீது டபுள் கிளிக் செய்வது போன்ற பழைய பழக்கங்களை விட்டுவிடுங்கள். அல்லது குயிக் லாஞ்ச் ஏரியாவில், புரோகிராம் ஐகான்களை வைத்து, அதில் ஒரே ஒரு முறை கிளிக் செய்வதன் மூலம் அவற்றை இயக்கலாம்.
இப்போது இன்னும் வேகமான முறை ஒன்று உள்ளது. விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 இயக்கத் தொகுப்புகளில், ஸ்டார்ட் பட்டனை அடுத்துள்ள இடத்தில் உள்ள புரோகிராம்களில் வரிசைப்படி, அதற்கான எண்ணை விண்டோஸ் கீயுடன் அழுத்தினால், அந்த புரோகிராம் இயக்கப்படும். எடுத்துக் காட்டாக, ஸ்டார்ட் பட்டனை அடுத்து, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பெயிண்ட், குவார்க் எக்ஸ்பிரஸ் என வைத்திருந்தால், விண்+1, விண்+2 என அழுத்தினால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், அடுத்ததாக பெயிண்ட் எனத் திறக்கப்படும்.

4. பாதுகாப்பற்ற பிளாஷ் ட்ரைவ்:
டேட்டாவினை எடுத்துச் செல்ல, பிளாஷ் ட்ரைவ்கள் மிகவும் வசதியானவை தான். ஆனால் இதில் உள்ள டேட்டாவினை, மற்றவர் அறியாதபடி என்கிரிப்ட் செய்து நாம் வைப்பதில்லை. இதனால், அது தொலைந்திடும் பட்சத்தில், நம் தனிப்பட்ட தகவல்கள் மற்றவருக்குக் கிடைத்திடும் சூழ்நிலைகள் உருவாகிவிடும். இதில் டேட்டாவினை எளிதாக என்கிரிப்ட் செய்திட, இணையத்தில் கிடைக்கும் ட்ரூகிரிப்ட்(TrueCrypt) போன்ற புரோகிராம்களைப் பதிந்து இயக்குவது நல்லது.

5.கண்ணை மூடிக் கொண்டு நெக்ஸ்ட் அழுத்துவது:
திடீரென நம் டெஸ்க்டாப்பில் ஏதேதோ படங்களுடன் ஐகான்கள் தோன்றி நம்மை ஆச்சரியப்படுத்தும். நாம் பயன்படுத்தும் வெப் பிரவுசரிலும் இதே போல் சில தோற்றமளிக்கும். இவை தோன்றுவதற்கு நாம் தான் காரணம் என்று உங்களுக்குத் தெரியுமா? சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்திடுகையில், என்ன ஏது எனப் படிக்காமலேயே, அடுத்தடுத்து நெக்ஸ்ட் பட்டனை அழுத்துகிறோம்.
இதன் மூலம் அந்த புரோகிராம்களைத் தயாரித்த நிறுவனங்களின் சோதனை டூல்கள், புரோகிராம்களை நம் கம்ப்யூட்டரில் நிறுவ நாம் சம்மதம் அளிக்கிறோம். மேலும் நமக்குத் தேவைப்படாத சில இயக்கத்திற்கும் இசைகிறோம். இது போல நாம் நம்மை அறியாமல் அளிக்கும் சலுகைகள், நம் கம்ப்யூட்டரில் மால்வேர் புரோகிராம்களை நிறுவி, நம்மை சிக்க வைக்கின்றன. எனவே, ஒரு புரோகிராமினை இன்ஸ்டலேஷன் செய்கையில், இணையப் பக்கம் வழியாக ஒன்றை டவுண்லோட் செய்கையில், நம்மிடம் எதற்கு இசைவு கேட்கப்படுகிறது என்று சரியாகப் படித்துப் பார்த்து இயங்க வேண்டும்.

6. ஒரே ஒரு பேக் அப் அபாயம்:
பலர் தங்கள் பைல்களுக்குப் பேக் அப் எடுப்பதே இல்லை. இது மிகப் பெரிய தவறு. சிலர் ஒரே ஒரு பேக் அப் பைலுடன் நிறுத்தி விடுகின்றனர். இதுவும் தவறுதான். எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் ஒன்றைப் பயன்படுத்தி, முழுமையான பேக் அப் காப்பி ஒன்றை உருவாக்குவதும், அதற்கான சாப்ட்வேர் ஒன்றை இயக்கி, குறிப்பிட்ட கால கட்டத்தில் பேக் அப் காப்பி அமைப்பதுவும் மட்டுமே சரியான வழியாகும்.
image

Lorem ipsum dolor sit

Aliquam sit amet urna quis quam ornare pretium. Cras pellentesque interdum nibh non tristique. Pellentesque et velit non urna auctor porttitor.

image

Nunc dignissim accumsan

Vestibulum pretium convallis diam sit amet vestibulum. Etiam non est eget leo luctus bibendum. Integer pretium, odio at scelerisque congue.