Tuesday, March 22, 2011

பற்றி எரியும் பூமி





விரிவடைந்து வரும் நகரப் பகுதிகளின் இடையே, மேகத்தை முட்டும் உயரத்தில் எழுந்துள்ள அடுக்குமாடி கட்டடங்கள், சாலைகள் எங்கும் விதவிதமான வாகனங்கள், வீடுகள்தோறும் நவீன இயந்திரங்கள், நகரங்களைத் தொடர்ந்து, கிராமப்புறங்களையும் ஆக்கிரமித்து வரும் தொழிற்சாலைகள் ஆகியவை, நாட்டின் முன்னேற்றத்தை குறிக்கும் இன்றைய அடையாளங்கள்.வேலையில்லா திண்டாட்டம் நீங்கவும், வளர்ந்த நாடாக உலக அரங்கில் பறைசாற்றவும், ஒவ்வொரு நாடும் தொழில், விவசாய, தொழில்நுட்ப வளர்ச்சியில் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. அதேசமயம், அத்தகைய வளர்ச்சியைவிட, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஆனால், அந்த நிலையா தற்போதுள்ளது?

கடந்த 1980ம் ஆண்டிலிருந்து, புவியின் வெப்பம் கடுமையாக அதிகரித்தபடி உள்ளது. 0.4 முதல் 0.45 டிகிரி செல்சியஸ் உயர்ந்து, தற்போது 0.74 டிகிரி செல்சியசை எட்டியுள்ளது. தற்போதைய 21வது நூற்றாண்டிற்குள், ஒட்டுமொத்த புவி வெப்பம் 6.4 டிகிரி செல்சியசாகக்கூட உயரும் என, ஐ.பி.சி.சி., (காலநிலை மாற்றம் குறித்த உலகநாடுகள் குழு) கணித்துள்ளது. புவியின் வெப்ப அளவு 1.5 – 2.5 டிகிரி செல்சியசுக்கு மேல் அதிகரித்தாலே, 20 முதல் 30 சதவீத தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அழியும் நிலைக்கு தள்ளப்படும் என்கிறது ஒரு ஆய்வு.புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம், கார்பனை அதிகளவில் வெளிப்படுத்தும் நிலக்கரி, இயற்கை எரிவாயு, பெட்ரோல் ஆகியவற்றை பெருமளவில் பயன்படுத்துவதே.புவி வெப்பமாதலும், அதனால் ஏற்படும் காலநிலை மாற்றங்களும், ஓரிரு நாளில் திடீரென நிகழ்வதில்லை. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன், தற்போது உள்ளதைப் போன்ற கோடிக்கணக்கான வாகனங்கள் இல்லை; “ஏசி’ பிரிட்ஜ் போன்ற வசதிகள் இல்லை. இதுபோன்ற வசதிகளை நமக்கு உருவாக்கிக் கொடுக்கும் தொழிற்சாலைகள் இல்லை. நமது சுய, ஆடம்பர வசதிகளுக்காக பயன்படுத்தப்படும் பெரும்பாலான இயந்திரங்கள், கார்பனை அதிகளவில் வெளிப்படுத்துகின்றன.இயற்கை வளங்களை நம்பியே வாழும் நாம், அத்தகைய இயற்கை வளங்களுக்கு பாதுகாப்பும் அளிக்க வேண்டிய நாம், அதை அழித்துக் கொண்டே வருகிறோம்.

மக்களின் வாழ்க்கைத் தரம், வேலைவாய்ப்பு, வசதியான வாழ்வு போன்றவற்றிற்கு தொழில் வளர்ச்சி அவசியம். அதற்காக, மரங்களை வெட்டி, காடுகளை அழித்து, ஏரிகளையும், ஆறுகளையும் வீட்டுமனைகளாக்கி, அடுக்குமாடி குடியிருப்பாகவும், தொழில் நிறுவனங்களாகவும் மாற்றுவது, நமது அழிவுக்கு நாமே தேதி குறிப்பது போல. அதிக அளவில் இயந்திரங்களை பயன்படுத்துவதாலும், தொழிற்சாலை அதிகரிப்பாலும், அவற்றில் இருந்து பெருமளவு கார்பன் வெளிப்படுகிறது. அதனால், காற்று மாசுபடுகிறது. இந்த நேரத்தில், நாம் சுவாசிக்க, காற்று மண்டலத்தில் கார்பன் அளவை குறைத்து, ஆக்சிஜனை வெளிப்படுத்தும் மரங்கள் நமக்கு தேவை. ஆனால், அத்தகைய மரங்களை அழித்து, கார்பனை அதிகளவில் வெளியிடும் தொழிற்சாலைகளை அல்லவா ஊக்குவித்து வருகிறோம்?அதிக விவசாயம் கூட, பசுங்குடில் வாயுக்களில் (கிரீன் ஹவுஸ் கேஸ்) ஒன்றான மீத்தேன் அளவை அதிகரிப்பதற்கு காரணமாய் அமைகிறது.கார்பன், மீத்தேன் உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்களை வெளிப்படுத்தும் நாடுகள் பட்டியலில், இந்தியா (4.6 சதவீதம்) நான்காம் இடத்தில் உள்ளது. அமெரிக்கா (21.2 சதவீதம்), சீனா (15.2 சதவீதம்), ரஷ்யா (5.4 சதவீதம்) ஆகிய நாடுகள், முதல் மூன்று இடங்களில் உள்ளன. பசுங்குடில் வாயுக்களை பெருமளவில் வெளிப்படுத்தும் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளின் மீது சுமையை வைக்க நினைத்தன. அதனால், கோபன்ஹேகன் மாநாடு எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பசுங்குடில் வாயுக்கள் நமக்கு ஒன்றும் எதிரியல்ல. அவை சரியான அளவில் இருப்பது நன்மை தரக்கூடியது. பூமியை சரியான வெப்ப நிலையில் வைக்க, இந்த பசுங்குடில் வாயுக்கள் மிகவும் அவசியம். இவை இல்லாவிடில், மனிதர்களால் வாழ முடியாத கடும் குளிரான காலநிலை தான் நிலவும்.

அதேநேரம், இவை அதிகரித்தால், பல ஆபத்துகள் ஏற்படும். பூமியில் இருந்து வெப்பம் வெளியேற முடியாமல், பசுங்குடில்களால் தடுக்கப்படுகிறது. இதனால், வெப்பம் அதிகரித்து, பூமி சூடாகிறது. விளைவு, பனிக் கட்டிகள் உருகுகின்றன. அந்த நீர் கடலில் கலப்பதால், கடல் மட்டம் அதிகரித்து, கடலோரப் பகுதிகள், தீவுகள், மூழ்கும் அபாயம் இருப்பதாக, ஒரு தரப்பு விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.கடந்த நூறு ஆண்டுகளாக, வெகுவாக கடல்மட்டம் உயர்ந்து வருவதாக ஆய்வு தெரிவிக்கிறது. இதேநிலை நீடித்தால், சிறு தீவுகள், கடலில் மூழ்கும் நிலை ஏற்படும். லட்சத்தீவும் காணாமல் போய்விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.மழைப்பொழிவும், மாறுபட்ட வெப்பநிலையும், லட்சக்கணக்கான ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது என்றாலும், தற்போதைய ஆய்வின் தகவல்கள் நம்மை அச்சப்பட வைக்கின்றன. உதாரணமாக, சென்னை நகரின் வெயிலின் அளவு, 50 ஆண்டுகளுக்கு முன்பைவிட, கடந்த ஐந்து ஆண்டுகளில், அதிக நாட்களில் 40 டிகிரி நிலவி வருகிறது. இதேபோலத்தான் மழை அளவும். குறிப்பிட்ட காலங்களில் பெய்ய வேண்டிய மழை, ஒரு சில நாட்களிலேயே பெய்து விடுகிறது. இதனால், மழையின் அளவும், குறிப்பிட்ட நாட்களில் மட்டும் வெகுவாக அதிகரிக்கிறது. இதன்விளைவு, நீர் பிடிப்பு பகுதிகளான ஏரி, குளம், ஆறு ஆகியவை, குடியிருப்பு பகுதிகளாக மாற்றப்பட்டு வரும் நகரங்களில், மழைநீர் செல்ல இடமில்லை. இரண்டு மணிநேர இடைவிடாத மழைக்கே வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை. மழைநீர் ஒருபுறம் வீணாகிறது; மற்றொரு புறம் கடலில் கலந்து, கடல் மட்டத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. மனிதனை நம்பி இயற்கையில்லை, இயற்கை வளங்களை நம்பித்தான் ஒவ்வொரு உயிரினமும் உள்ளன. இயற்கைக்கு எந்த உதவியும் நாம் செய்ய வேண்டியதில்லை. அதற்கு தீங்கு விளைவிக்காமல் இருத்தாலே, அது நாம் செய்யும் மிகச் சிறந்த கைமாறு. கொளுத்தும் வெயிலை தாங்க முடியாத நாம், நிழலைத் தேடி ஓடுகிறோம்; நாம் இருக்கும் அறையை மட்டும் செயற்கையாக குளிரூட்டிக் கொள்கிறோம். சரி… நாளுக்கு நாள் அதிகரிக்கும் சூட்டை தணித்துக்கொள்ள, இந்த பூமி எங்கே செல்லும்? பூமி குளிர்ச்சியாக இருந்தால் மட்டுமே, அதன்மீதுள்ள நம்மைப் போன்ற அனைத்து உயிரினங்களும் நலமாக இருக்க முடியும்.இயற்கையை பயன்படுத்திக் கொள்ள நாம் எந்தளவுக்கு உரிமை எடுத்துக்கொண்டோமோ, அதைவிட அதிக கடமை, இயற்கையை பாதுகாப்பதிலும் உண்டு. பசுங்குடில் வாயு வெளியீட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் உடனடியாக இறங்க வேண்டும். அதுதான் தற்போதைய அவசர தேவை. இயற்கையை சேதப்படுத்தாமல், சுற்றுச்சூழலை பாதுகாத்தலே உண்மையான, நிலையான, வருங்கால தலைமுறையினருக்கு தேவைப்படும் ஈடு இணையில்லா சொத்து!
நன்றி-தினமலர்

No comments:

Post a Comment

image

Lorem ipsum dolor sit

Aliquam sit amet urna quis quam ornare pretium. Cras pellentesque interdum nibh non tristique. Pellentesque et velit non urna auctor porttitor.

image

Nunc dignissim accumsan

Vestibulum pretium convallis diam sit amet vestibulum. Etiam non est eget leo luctus bibendum. Integer pretium, odio at scelerisque congue.